Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பில் அவசர மேன்முறையீடு

6 minutes read

2021ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானம் தொடர்பாக இணை அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் தமிழர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துதலை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர கடிதத்தை பொத்துவில் தொடங்கம் பொலிகண்டி வரை பெரெழுச்சி இயக்கம் அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு,

கீழே ஒப்பமிட்டுள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பினர் மற்றும் வடக்கு-கிழக்கு சிவில் சமூக மற்றும் சமய அமைப்புக்களைச் சேர்ந்தோருமாகிய நாங்கள் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானமானது குறிப்பாக தமிழ்ச் சமூகத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும், விசேடமாக தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றமை மற்றும் தமிழப் பெண்களை வன்புணர்ந்தமை அடங்கலான இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட கொடூரமான குற்றங்களின் பொருட்டான சர்வதேசத்தின் பொறுப்புக்கூறலைப் பூர்த்திசெய்யவில்லை எனக் கருதுகிறோம்.

இணை-அனுசரணை நாடுகளின் உறுப்பினர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளுக்கும் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றிற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை பூச்சிய வரைவுத் தீர்மானத்தில் உள்ளடக்குவதற்கான மேன்முறையீட்டின் பொருட்டு நாம் இதனை வரைகிறோம்.

நிலவரத்தின் தீவிரத்தன்மையின் காரணமாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று தமிழர்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு ஓர் கடிதத்தை அனுப்பியிருந்தோம். இந்த அழைப்பானது அண்மையில் வடக்கு-கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு ஆயிரக் கணக்கான பொதுமக்களின் பங்குபற்றிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) என்ற பேரணியின் மூலமாக வலுச்சேர்க்கப்பட்டிருந்தது.

போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரியப்பட்டுள்ள இனப்படுகொலை ஆகியவற்றின் பொருட்டு நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையையும் நாம் இழந்துள்ளமையினாலேயே இவ் வேண்டுகோளை நாம் விசேடமாக தங்களிடம் வலியுறுத்திக் கோரியிருந்தோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதனை்த தவிர்த்தால், எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும். எனவே, இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல் விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

“இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும். எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான வர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்” எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள்,

1. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக்கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2. இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம் ஆண்டின் இறுதிக் கட்ட யுதத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமற் போயுள்ளனர்.

3. அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத்தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீது கூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவ சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கேற்பட்டும் மரணித்தனர்.

4. 2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது (ITJP), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கற்பழிப்பு முகாங்கள் பற்றிய விபரங்களை ஐ.நா விடம் கையளித்தது.

5. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் 2013 சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்தமூல விதவைகள் உள்ளனர்.

6. குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு

அடுத்துவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) தீர்மானங்களை அமுற்படுத்தத் தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர நாம் விரும்புகிறோம்.

முன்னய அரசாங்கமானது அது இணையனுசரணை வழங்கிய தீர்மானத்தை அமுற்படுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மாத்திரமல்லாது, முரணாக சனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம் UNHRC தீர்மானத்தை அமுற்படுத்த மாட்டோம் எனத் திரும்பத்திரும்பவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதய புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30/1, 34/1 மற்றும் 40/1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன் யூஎன்எச்ஆர்சீ பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்தும் வெளிநடப்புச் செய்துள்ளது.

மேலும், UNHRC இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாக பொதுமக்களைக் கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதய சனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகு முறையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதுடன் “யுத்த நாயகர்களாக” ஆகவும் மதிப்பளிக்கப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் யுத்தக் குற்றாவாளியாக சந்தேகிக்கப்படுகின்ற ஓர் உத்தியோகத்தர் நான்கு-நட்சத்திர அதிபதியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

எமது மேன்முறையீட்டைத் தீவிரத்தன்மையுடன் கருத்திற் கொள்வதன் பொருட்டும் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்ப்பட வேண்டியமையை உள்ளடக்குவதன் பொருட்டும் இம் மேன்முறையீட்டை நாம் மேற்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More