கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற சபையின் சிபாரிசுக்கமைய, வருடாந்த இடமாற்றம் 2021ம் ஆண்டுக்கான பதிலீட்டு ஆசிரியர்களுக்கான இடமாற்றம் எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் அறிவித்துள்ளார்.
ஒரு வலயத்தில் பாடரீதியாக மேலதிக ஆசிரியர்கள், ஒரு வலயத்தில் தொடர்ச்சியாக 10 வருடங்கள் கடமையாற்றியதுடன் ஒரு போதும் வெளி வலயத்தில் சேவைக்காலத்தைக் கொண்டிராத அல்லது வெளி வலயத்தில் 02 வருடங்களுக்கு குறைந்த வலயத்திற்குரிய சேவையைக் கொண்டுள்ள ஆசிரியர்கள்.
குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்படும் வலய பாடசாலையில் 02 வருடங்கள் சேவையாற்ற வேண்டும். இக்காலத்தை பூர்த்தி செய்தவுடன் அவ்வாசிரியர்களுக்கு அவர்களுடைய முன்னைய வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். இக்காலத்தினுள் தற்காலிக இணைப்பு, கற்கை விடுமுறை, ஆசிரியர் பயிற்சி விடுமுறை அல்லது வேறு கடமைகளுக்காக விடுவிப்பு பெற்றிருப்பின் அக்காலம் உள்ளடக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வலயக் கல்வி அலுவலகத்தில் கட்டாய சேவைக்கால நிபந்தினையைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள், தமது முதல் நியமன நிபந்தனைக்கமைய மிகுதி சேவைக்காலத்தினை வழங்கப்பட்ட வலய பாடசாலையில் பூர்த்தி செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவைக்காலத்தை பூர்த்தி செய்தவுடன் இவ் ஆசிரியர்களுக்கு முன்னைய வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும். கட்டாய சேவை நிபந்தனைக் காலத்தினுள் தற்காலிக இணைப்பு , கற்கை விடுமுறை, ஆசிரியர் பயிற்சி விடுமுறை அல்லது வேறு கடமைகளுக்காக விடுவிப்பு பெற்றிருப்பின் அக்காலம் கட்டாய சேவைக் காலத்தினுள் உள்ளடக்கப்படமாட்டாது.
இது தொடர்பான ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின் தாங்கள் கடமைபுரியும் பாடசாலை அதிபர் , வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சிபாரிசுடன் பதிவுத் தபால் மூலம் நேரடியாகவோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளருடாகவோ மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்பாக அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.