Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையின் முதல் தமிழ் பெண் வேந்தர் பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்

இலங்கையின் முதல் தமிழ் பெண் வேந்தர் பேராசிரியர் யோகா இராசநாயகம் காலமானார்

2 minutes read

இலங்கை வரலாற்றில் முதலாவது பல்கலைக்கழக பெண் பீடாதிபதியும்,இலங்கையின் முதலாவது தமிழ் பெண் பல்கலைக்கழக வேந்தருமான வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் கொழும்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26-04-2021) காலமானார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1959ம் ஆண்டு புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

புவியியல்துறை கற்கைகளுக்கு அப்பாலும், இசைத்துறையிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்த அவர், சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகராகவும், வீணை இசை வித்தகராகவும் விளங்கியதுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வானொலி இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தியிருந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அவர்களுடைய சிங்கபாகு நாடகத்துக்கு இவர் வீணை இசை வழங்கியிருந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குப் பின்னர், 1963ம் ஆண்டு முதல் கொழும்பு பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளராக தன் பணியைத் தொடர்ந்த அவர்,அங்கு சிரேஷ்ட விரிவுரையாளராக தரமுயர்ந்து துறைத்தலைவராகவும் நீண்டநாட்கள் கடமையாற்றினார்.

இந்தக் காலப்பகுதியில் புவிவியல்துறை மற்றும் பால்நிலை சமத்துவம் சார்ந்த பல்வேறு புலமைசார் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி, தன்னுடைய துறைக்கு அப்பாலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டியிருந்தார்.

இவ்வாறு அவர் கொண்டிருந்த நீண்ட அனுபவம் மற்றும் புலமைத்துவத் தேர்ச்சி காரணமாக 2002ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக நியமனம் பெற்ற பேராசிரியர் யோகா இராசநாயகம், இதன்மூலம், இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.

கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பல தடவைகள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தேசிய சமூக கற்கைகள் நிறுவனத்தின் புலமைத்துவப் பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட ஆலோசகராகவும் 2006 முதல் 2014 வரையில் செயற்பட்டுவந்த வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் அவர்கள், 2011ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்மூலம், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

கொழும்பு ஹவ்லொக் வீதியில், 413/2C என்ற இலக்கத்தில் வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் வசித்துவந்த ஒழுங்கை, அவர் வேந்தராக நியமிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் வேந்தர் வீதி என்ற மாற்றப்பட்ட நிலையில் அங்கு தான் வாழ்வைத் தொடர்ந்த வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் அவர்கள், சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

மறைந்த அன்னையரை நினைவுகூர்ந்து பிரார்த்திக்கும் இந்துக்களின் புனித நாளாக அனுட்டிக்கப்படும் சித்திரா பௌர்ணமி தினமான ஏப்ரல் 26ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கி இயற்கை எய்தினார்.

கொவிட் – 19 சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு அன்னாரது இறதிக்கிரியைகள் நேற்று 27-04-2021 செவ்வாய்க்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

அன்னாரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனை நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல் பின்னர் வெளியிடப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More