Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 3ஆம் டோஸ் தேவைப்பட்டால், ஏற்பாடு செய்யுங்கள்!

3ஆம் டோஸ் தேவைப்பட்டால், ஏற்பாடு செய்யுங்கள்!

2 minutes read

சுகாதாரப் பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தடுப்பூசி ஏற்றுவதில் மூன்றாவது டோஸ் தேவைப்டுமாக இருந்தால், அதனை இப்போதே பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகின் பல முன்னணி நாடுகள் மூன்றாவது டோஸுக்கான தடுப்பூசிகளை தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. இலங்கையும் இது குறித்து விசேட கவனம் செலுத்தி மூன்றாவது டோஸ் வழங்குவதற்கான அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகெங்கிலும் தடுப்பூசிகளுக்கு பெரும் கேள்வி உள்ளது. இந்தப் போட்டி சூழ்நிலையில், இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பல நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அந்தவகையில், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போது அதிகளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அதே நேரம், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் கொவிட் நோய்த்தொற்று பரவுவதையும், மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதையும் தடுக்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு விசேட குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

முறையான தடுப்பூசி ஏற்றல் மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வோர் பற்றிய தரவுகளை சேகரிப்பதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) விசேட மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கிராம சேவகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை இலகுவாக ஒதுக்கிக் கொள்ள முடியும்.

தற்போது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மற்றும் எதிர்காலத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள இருக்கின்றவர்கள் அனைவரையும் பற்றிய தகவல்களை உள்ளடக்கவும், தடுப்பூசி தொடர்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிச் சான்றிதழை வழங்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொவிட் வைரஸ் தொற்று அல்லாமல் மரணிப்பவர்களுக்கான இறுதிக் கிரியைகளும், பி.சி.ஆர். பரிசோதனைகளின் காரணமாகத் தாமதப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைக் கருத்திற் கொண்டு, வேறு காரணங்களால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை 24 மணி நேரத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுக்க கொவிட் ஒழிப்பு விசேட குழு முடிவு செய்தது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரனதுங்க, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்கள் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More