Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஏப்ரல் ஃபூல் அன்று தமிழீழக் காவல்துறையிடம் ஆப்பிட்ட கதை | கானா பிரபா

ஏப்ரல் ஃபூல் அன்று தமிழீழக் காவல்துறையிடம் ஆப்பிட்ட கதை | கானா பிரபா

3 minutes read

ஏப்ரல் முதலாம் திகதி என்ற நாளே மறந்து போய் ஏப்ரல் ஃபூல் நாள் ஆக்கி விடுவோம் அப்போது. அடுப்படியில் குவிந்திருக்கும் கரிக்கட்டியைப் பழம் பேப்பரால் (பழம் பேப்பர் = பழைய பேப்பர்)
சுத்தி, ஊரில் தெரிந்த இன சன வீட்டுக்கு போய்ப் படலையைத் தட்டி “அம்மா பலகாரம் தந்தவ” எண்டு சொல்லி, பொட்டலத்தைப் பிரிச்சுப் பார்க்கும் வரைக்கும் காத்திருந்து
“ஏப்ரல் ஃபூஊஊஊஊல்” என்று கத்தி விட்டு ஓடி வர வேணுமாம்.

“கொழும்பில் இருந்து காயிதம் வந்தது” எண்டு சொல்லி பழைய என்வலப்பைக் குடுக்கிற சேட்டையள் வேறை. இது பின்னாளில் காதலிக்கிற ஆளுக்குக் கொடுத்து விட்டு மற்றப் பக்கம் சாதகமான முக பாவம் இல்லையெண்டால் “ஏப்ரல் ஃபூல்” சொல்லலாம் எண்டெல்லாம் மூளை குறுக்கால ஓடியிருக்கு. பிரபலங்களை எல்லாம் சாகடிச்சிப் போடுவினம் “உவன் ஜேயார் செத்துப் போனானாம்” என்பதில் இருந்து தமிழகத்தின் கலைத்துறைப் பிரபலங்களையும் விட்டு வைப்பதில்லை.
அது மட்டுமே கூழ் முட்டை அடிக்கிறதும் சில பல பள்ளிக்கூடங்களில் நடந்திருக்கு.
ஏப்ரல் ஃபூல் ஐ ஏப்பிற ஃபூல் எண்டும் ஆக்கிப் போட்டாங்கள் பேச்சு வழக்கில.
கதையோட கதையா, குஷ்பு பிரபலமான இருந்த நேரம் பாலசந்தருக்கும் குஷ்புவுக்கும் கல்யாணம் என்று குமுதம் இதழ் ஏப்ரல் 1 முன்னட்டையோடு வந்து பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது.

சரி நாங்கள் கதைக்கு வருவம். அந்த நாளையில பார்க்கர் பேனையின்ர இடத்தை றெனோல்ட்ஸ் பிடிச்சாப் பிறகு குமிழ்முனைப் பேனா யுகம் வந்து மை நிரப்பும் பேனா யுகம் மெல்ல அழியுது. எங்கட வகுப்பில சர்வேஸ் மட்டும் தான் மை நிரப்பிய பேனாவைப் பாவிப்பான், முத்து முத்தாக எழுதுவான். வாயை நொருக்கிக் கொண்டு அவன் எழுதும் வடிவே வடிவு.
ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி என்றால் புத்தகக் கடையெல்லாம் தேடிப் பிடிச்சு மைப் போத்தலை வாங்கி வைத்து விடுவாங்கள் பெடியள். வேறை என்னத்துக்கு, பேனைக்குள் மையை நிரப்பி ஆளாளுக்கு மை அடிக்கத் தான். பள்ளிக் கூட நாளென்றால் அருமையான வெள்ளைச் சட்டை எல்லாம் பாழ். சொட்டு நீலம் போட்டுத் தோய்ச்சாலும் போகாது.

அன்று ஏப்ரல் 1 திகதி ஒரு சனிக்கிழமை. ஏ.எல் படிப்புக்கு C.C.A ரியூசன் சென்ரருக்கு ஶ்ரீ மாஸ்டரிடம் காலை நேர வகுப்புக்குப் போயாச்சு. ஶ்ரீ மாஸ்டர் தன்ர வீட்டிலை படிப்பிச்சுட்டு வந்து தான் நடத்தும் ரியூசன் சென்ரர் கணக்கு வழக்கெல்லாம் பார்த்திட்டுத் தான் வருவார். வகுப்பு குமிஞ்சு போய்க் கிடக்குது, கலபில கலபில எண்டு சத்தம். திடீரெண்டு அந்தப் பக்கம் ஒருத்தன் எத்தின மை இங்கால ஒருத்தன் சட்டையில விழுந்தது. பெடியளின்ர ஒண்டிரண்டு துவக்குச் சத்தம் கேட்டு ஆமிக்காறன் படார் படாரெண்டு ஆட்லறி அடிக்கிறது மாதிரித் தொடங்கினாங்கள் பாருங்கோ எல்லாப் பக்கம் இருந்தும் சர சரவெண்டு மை அடி படுகுது.
எட கோதாரி இவ்வளவு நேரமும் அமுசடக்கி மாதிரி இருந்தியேளாடா என்று திகைப்பு. கிட்டத்தட்ட எல்லார் சட்டையிலும் மை அடித்து கோலிப் பண்டிகை கொண்டாடி இருந்தது.
என்ர கையில றெனோல்ட் பேனை தான். அடச் சீ எண்டு நினைச்சு விட்டு கீழே பார்த்தால் காலுக்குள் செம்மண் மண் குவியல், அதை அள்ளிப் பக்கத்தில் இருந்தவன் முன்னாலை பின்னாலை இருந்தவங்கள் சட்டையில் பிரட்டினேன், ஏதோ ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி. அவ்வ்.

ரியூசன் கொட்டிலுக்குள் ஒரு வரிசையில் பத்துப் பெடியள் எண்டால் அங்காலிப்பக்கம் அதே மாதிரிப் பொம்பிளைப் பிள்ளையள் இருப்பினம். இவங்கள் ஆர்வக் கோளாறிலை பொம்பிளைப் பிள்ளையளுக்கும் எட்டி மை அடிச்சுட்டாங்கள். ஶ்ரீ மாஸ்டரும் வந்துட்டார். இடுப்பில கைய வச்சுக் கொண்டு கோவமாகப் பார்த்தவர் சிரிச்சுப் போட்டார்.

ஒரு வழியாக வகுப்பு முடிஞ்சு வந்து பார்த்தால் பொம்பிளைப் பிள்ளையளின்ர பார் இல்லாத சைக்கிள் எல்லாத்தையும் தவிர மிச்சம் இருந்ததில் எங்கட சைக்கிளை எல்லாம் காணேல்லை. என்னடா நாசமறுப்பு எண்டு திகைத்துக் கொண்டிருக்க, தமிழீழக் காவல்துறைச் சீருடையோடு ஒருத்தர் வாறார்.

“பொம்பிளைப் பிள்ளையளுக்கு மை அடிக்கிறியளோ மை,
வாங்கடா எல்லாரும் கச்சேரியடி காவல்துறைப் பணிமனைக்கு”
என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வகுப்பில இருந்த ஆரோ ஒரு புதுமைப் பெண் ரேவதி அதுக்குள்ள போய்ப் போட்டுக் குடுத்துட்டாளே என்று புளங்கிக் கொண்டு, பார் (Bar) இல்லாத சைக்கிளில் (பொம்பிளைச் சைக்கிள்) வந்த பெடியளின் சைக்கிள் கரியரில் ஏறிப் போய் கச்சேரியடி தமிழீழக் காவல்துறைப் பணியகம் போனால், சைக்கிள் எல்லாம் குவிஞ்சிருக்குது.
அங்குள்ள பொறுப்பாளரிடம்
“மன்னிச்சுக் கொள்ளுங்கோ அண்ணை!
இனிமேல் இப்பிடிச் செய்ய மாட்டம்”
என்று கேயார் விஜயா மாதிரி மன்னிப்பெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்,
“இனிமேல் இப்பிடி கதை கேள்விப்பட்டன்,
அரியாலைக்கு பங்கர் வெட்டத்தான் அனுப்புவன்”
எண்டு சொல்லி வெருட்டி விட்டு அனுப்பி விட்டார் சைக்கிளோடு.

கானா பிரபா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More