December 2, 2023 9:07 pm

தளபதி விஜயின் ‘லியோ’ பட இசை வெளியீட்டு விழா ரத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜயின் ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ‘ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்மாக நடத்தப்படாது’ என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘லியோ’. இந்த திரைப்படத்தில் தளபதி விஜயுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மனோஜ் பரஹம்ஸா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித் குமார் தயாரித்திருக்கிறார். ஜெகதீஷ் பழனிச்சாமி இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30ஆம் திகதியன்று நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விழா நடத்தப்படாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக படத் தயாரிப்பாளர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது… ”பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவிற்கு பிரத்யேக நுழைவு சீட்டு கேட்டு கோரிக்கைகள் அதிகரித்து வருவதால் இசை வெளியிட்டை நடத்துவதில்லை என தீர்மானித்திருக்கிறோம். எனினும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை தொடர்ந்து வெளியிடுவோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் அந்த பதிவில், ”இசை வெளியீடு நடைபெறாதது குறித்து பலர் பல காரணங்களை தெரிவிப்பர். ஆனால் அரசியல் அழுத்தங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்த விழா ரத்து செய்யப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி” குறிப்பிடப்பட்டிருக்கிறது.‌ இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இணையத்தில் பல்வேறு பின்னூட்டங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இதனிடையே ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டை வெளிநாட்டில் நடத்துவது குறித்தும், உள்நாட்டில் இரண்டு முன்னணி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்