இங்கிலாந்தின் பிட்டிங்டன் (Piddington) கிராமத்திற்கு அருகிலுள்ள முன்னாள் இராணுவத் தளத்தில் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தங்க வைப்பதற்கான திட்டத்திற்குப் இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
ஆக்ஸ்போர்டுஷையர் (Oxfordshire) பகுதியில் அமைந்துள்ள பிசெஸ்டர் (MoD Bicester) முன்னாள் பாதுகாப்பு அமைச்சகத்தின் தளத்தில் 1,256 ஆண்கள் வரை தங்க வைப்பதற்கான புதிய குடியிருப்புகள், சுகாதாரம் மற்றும் நலன்புரி வசதிகளை அமைப்பதற்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான இருப்பிடத் தேவை அதிகரித்துள்ள நிலையில், இத்திட்டத்தை அவசர மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, வீட்டுவசதித் துறை அமைச்சர் ஏஞ்சலா ரேனர் (Angela Rayner) விரைவுப் பாதை முறையின் ஊடாக இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இத்திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
இத்திட்டத்திற்கு எதிராக 3,177 மனுக்களும், ஆதரவாக ஒரேயொரு மனுவும் பதிவாகியுள்ளன. உள்ளூர் மக்கள், கவுன்சிலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கலம் மில்லர் (Calum Miller) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இத்திட்டத்திற்குத் தீவிர எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் இந்த அனுமதியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பாளர்களுக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை அதிக செலவு கொண்ட ஹோட்டல்களில் தங்க வைப்பதைத் தவிர்த்து, 24 மணி நேரப் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய முன்னாள் இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்க முடியும் என இங்கிலாந்து உள்நாட்டு அமைச்சகம் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.
