December 11, 2023 2:02 am

இஸ்ரேல் போர் பிரகடனம் | ஹமாஸின் “ஆபரேஷன் அல்-அக்ஸா புயல்”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிணைய கைதிகளாக இஸ்ரேல் ராணுவ வீரர்கள் !!

——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இஸ்ரேலில் உச்சக்கட்ட பதற்றமும், மீண்டும் காசாவில் கடும் சண்டை தொடர்கிறது. நீண்டகால ஆக்கிரமிப்பினை இஸ்ரேல் தொடர்வதால் முடிவிலா துயரில் பாலஸ்தீன மக்கள் அல்லட்படுகின்றனர்)

இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள் நடத்திய எதிர்பாராத வகையில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதால், பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் போர் பிரகடனத்தை செயல்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்துக்குள் 5000 ராக்கெட்டுகளை ஏவப்பட்டுள்ளது.

5000 ராக்கெட் தாக்குதல்:

இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது பாலஸ்தீன ஆயுத போராளிகள் நடத்திய எதிர்பாராத வகையில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதால், பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் களம் இறங்கியுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் எல்லைப்பகுதியாக உள்ள காசாவுக்கு இரு தரப்பும் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.

பல ஆண்டுகளாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுக்களை இஸ்ரேல் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இரு தரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என பல நாடுகளும் வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் 5000 ராக்கெட்டுகளை ஏவிய தாக்குதல் சம்பவமானது நடைபெற்றுள்ளது.

ஞாயிறு காலை காசா பகுதியில் பாலஸ்தீன ஆயுத போராளிகள் கிட்டதட்ட 5000 ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. காலை 6 மணிக்கு இந்த தாக்குதல் தொடங்கியதாகவும், இதில் பல கட்டடங்கள் தரை மட்டமானதோடு, ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பாலஸ்தீன ஆயுத போராளிகள் காசா பகுதிக்கு ஊடுருவியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலில் போர் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டதட்ட 80 கி.மீ. அளவுக்கு இந்த பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸின் “ஆபரேஷன் அல்-அக்ஸா புயல்”

இஸ்ரேலின் சில இடங்களில் ஹமாஸ் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செயலிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாலஸ்தீன படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவத்தினர் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹமாஸின் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும், “ஆபரேஷன் அல்-அக்ஸா புயல்” என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் இதுவரை நான்கு முறை நடைபெற்ற போரால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது அங்கு போர் பதற்றம் நிலவுவதால் இம்முறை பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

பிணைய கைதிகளாக இஸ்ரேல் வீரர்கள்:

இஸ்ரேல் – பாலஸ்தீனருக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாகவே காசா பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. இந்த பகுதியை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் என இரு தரப்பும் சொந்தம் கொண்டாடுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

மீண்டும் மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவ வீரர்களை ஹமாஸ் படையினர் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாகத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

காசா பகுதியில் இருந்து சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். காசாவில் பல்வேறு இடங்களில் இருந்து நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில், சுமார் 5000 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்துள்ளது.

இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சைரன் உதவியுடன் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் போர் நிலையை இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்குமாறும் எச்சரித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம், கடந்த ஒரு மணி நேரமாக காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் பல்வேறு இடங்கள் மூலம் இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவினர் என்று தெரிவித்துள்ளது.

நூறாண்டுகளாக தொடரும் துயரம்:

இஸ்ரேல் – பாலத்தீன முரண்பாடு நூறாண்டுகளாகத் தொடரும் துயரமும் ஆக்கிரமிப்பும் இன்னமும் தொடர்கிறது. நூற்றாண்டுகால மோதலாக பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர்.

பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, “தேசியப் பகுதி” ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் பெத்லஹாம் யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர்,

இஸ்ரேல் உருவாக்கம்:

ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 – 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.
யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன.1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது.இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர். அதை பாலஸ்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர்.

1967 இல் ஆறு நாள் அரபுப் போர்:

1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர்.
ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.

இது நாடு யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது.

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் ?

1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.

இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் ஆகிய இரு தரப்பினருமே உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் இது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சிக்கலான மோதலின் மிகச்சமீபத்திய ஒரு அத்தியாயம்தான். இதற்கு தீர்வு என்பது வெகு தொலைவில் இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது

1993ல் ஒஸ்லோ சமாதான ஒப்பந்தம்:

பாலத்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும், 1993ல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, பாலத்தீன அமைப்பு “வன்முறையையும், பயங்கரவாதத்தையும்” கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் ‘அமைதியுடனும் பாதுகாப்புடனும்’ வாழ அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது. இந்த அங்கீகாரத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இஸ்ரேல் மேற்குக்கரையிலிருந்தும், காசாவிலிருந்தும் அதன் யூதக் குடியேற்றங்களை படிப்படியாக விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன் மூலம் பாலத்தீனர்கள் ஒரு சுதந்திரமான நாடாக உருவாக அனுமதிக்க இந்த முடிவுக்கு அது ஒப்புக்கொண்டது. ஆனால் இதை இஸ்ரேல் ஒரு போதும் அமல்படுத்தவில்லை.

காசா கட்டுப்பாட்டை இழந்த இஸ்ரேல்:

இப்போதய தாக்குதலால் இஸ்ரேலின் ஸ்டெரோட் என்ற பகுதியை ஹமாஸ் படையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் சண்டையில் பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பாலஸ்தீனப் படையினர் இஸ்ரேலின் ஸ்டெரோட்டில் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் தனது கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்துள்ளதாகப் பல தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மீண்டும் போர் மூளும் அபாயம் :

இந்த ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் வெடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. கடந்த 2021 வருடம் போல் தற்போதும், அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் மீண்டும் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே மீண்டும் போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது.

மீண்டும் காசாவில் தொடங்கிய கடும் சண்டையால் முடிவிலா துயரில் பாலஸ்தீன மக்கள் அல்லல் படுகின்றனர். ஆனாலும் பாலஸ்தீன மண்ணில் ஆக்கிரமிப்பில் இஸ்ரேல் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவிலா துயரமாக நீண்டு கொள்கிறது.

2021 ஆண்டை போன்று மீண்டும் காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்டெரோட்டின் கிப்புட்ஸ் பகுதியில் பாலஸ்தீனிய ஹாமாஸ் படையினர் பல இஸ்ரேல் நாட்டினரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளதுடன், இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் கடுமையாக தாக்குதல் நடைபெற்று வருகிறது.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்