December 8, 2023 9:45 pm

விசாரணைகளின் மூலமே ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டை தவறென நிரூபிக்கமுடியும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனேடியப் பிரதமரின் ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளைப் பொறுத்தமட்டில், அவை எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் அதனைத் தடுக்கமுடியாது. மாறாக அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலமே அதனைத் தவறான குற்றச்சாட்டென நிரூபிக்கமுடியும் என்று சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், தேசிய சமாதானப்பேரவையின் பணிப்பாளருமான ஜாவித் யூசுஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்காசிய சிந்தனைக் குழாம்களின் ஒன்றியத்துடன் இணைந்து தேசிய சமாதானப்பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சர்வதேச தொடர்புகளில் போலிச்செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை’ எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ‘சர்வதேச தொடர்புகளில் போலிச்செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை குறித்த இலங்கையின் அனுபவங்கள்’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் கருத்து வெளியிடுகையிலேயே ஜாவித் யூசுஃப் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் சொந்தக்கருத்துக்கள் மற்றும் தனியுரிமை என்பன பாதுகாக்கப்படவேண்டும். இருப்பினும் அரசியல் உள்ளிட்ட பொதுவாழ்வில் ஈடுபடுவோர் விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று தற்போது முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் கருத்துரைத்த அவர், அச்சட்டத்தின் ஊடாக தவறான மற்றும் போலியான தகவல்கள் மாத்திரம் முடக்கப்படக்கூடியவகையிலும், அவற்றுடன் தொடர்புபட்டவர்கள் மாத்திரம் தண்டிக்கப்படக்கூடியவாறும் அது இறுக்கமாகத் தயாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் கனேடியப் பிரதமரின் ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளைப் பொறுத்தமட்டில், அவை எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் அதனைத் தடுக்கமுடியாது என்று சுட்டிக்காட்டிய ஜாவித் யூசுஃப், மாறாக அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலமே அதனைத் தவறான குற்றச்சாட்டென நிரூபிக்கமுடியும் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்