புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நானும் ஶ்ரீதரனும் யாழ் மாவட்டத்தில் போட்டி | சுமந்திரன்

நானும் ஶ்ரீதரனும் யாழ் மாவட்டத்தில் போட்டி | சுமந்திரன்

3 minutes read

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவது கடினமாக உள்ளதுடன் நாளையும் வேட்பாளர் தெரிவு முடிவு பெறாது என தமிழரசுக்கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (05) தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் நியமன குழு இன்று வவுனியாவில் கூடிய நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் நியமன குழுவானது இன்று வவுனியாவில் கூடி மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்து இருக்கின்றோம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதும் எந்தெந்த இடங்களிலிருந்து வேட்பாளர்கள் வரவேண்டும் குறிப்பாக இன்றைய நிலையில் மாற்றத்தை இளைஞர் யுவதிகள், படித்தவர்கள் வரவேண்டும் என பெருவாரியான எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். அதற்கு இடம் கொடுத்து எந்த விதமாக இந்த வேட்பாளர்களை நியமிப்பது  தொடர்பில் பல சிந்தனைகள் இன்று பரிமாறப்பட்டன.

எனினும் நாங்கள் இன்றைய தினம் எந்த மாவட்டம் தொடர்பிலும் ஒரு தீர்மானம் எடுக்கவில்லை.

எனினும் நாங்கள் கடந்த முறை மத்திய செயற்குழுவிற்குப் பின்னர் அறிவித்ததை போலத் திருகோணமலை மாவட்டம் அம்பாறை தேர்தல் மாவட்டம் சம்பந்தமாக விசேட கரிசனை ஒன்று இருக்கின்றது.

இந்த இரு மாவட்டங்களிலும் ஒரு தமிழ் பிரதிநிதியையே பெற்றுக் கொள்ள முடியும். எனவே தமிழ் கட்சிகள் எதிர் எதிராகப் போட்டியிட்டால் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதைப் போல இம்முறையும் அந்த மாவட்டத்திலும் திருகோணமலையிலும் இவ்வாறான ஒரு சாத்தியக்கூறு இருப்பதன் காரணத்தினால் அது குறித்து சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடயத்தில் திருகோணமலை கத்தோலிக்க ஆயர் மிக முனைப்பாகப் பல கட்சிகளோடு பேசி சில நகர்வுகளைச் செய்திருக்கின்றார். அவரை சந்திப்பதற்காக நாங்கள் சிலர் செல்கின்றோம். அந்த விடயத்தை நாங்கள் வெற்றிகரமாக முடிப்போமாக இருந்தால் எங்களுடைய மத்திய செயற்குழு தீர்மானம் மற்றும் அரசியல் குழு தீர்மானம் இன்றும் நாங்கள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழரசு கட்சியினுடைய பெயரிலும் சின்னத்திலும் தான் நாங்கள் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

ஆனால் திருகோணமலையிலும் அம்பாறையிலும் மற்ற கட்சி உறுப்பினர்களையும் உள்வாங்கி ஒரு போட்டி இல்லாமல் தேர்தலை சந்திப்பதற்கான விடயங்கள் ஆராயப்படுகின்றன. அதனை நாங்கள் செய்து முடித்த பின்னர் நாளை மீண்டும் சந்தித்து வேட்பாளராக விண்ணப்பித்தவர்கள் உடைய பெயர்களை ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்போம்.

எனினும் நாங்கள் நாளையும் இறுதி தீர்மானம் எடுப்போம் என்று கூற முடியாது. நாங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரியான வேட்பாளர்கள் சில இடங்களில் முன் வரவில்லை.

இதேவேளை பெண்கள் பல இடங்களில் முன்வரவில்லை.  பள்ளம் மேடு காடு எங்குத் தேடியும் பெண்கள் கிடைக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் பல குறைபாடுகளைக் கூறுகின்றார்கள். அவர்களுக்கான நியமனங்களை நாங்கள் கொடுப்பதில்லை என்று. ஆனால் நாங்கள் அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்கத் தயாராக இருக்கின்ற போதிலும் வராத ஒரு சூழ்நிலை இருக்கின்றது. எனவே பெண்களுக்கும் பெண்கள் அமைப்புகளுக்கும் ஒரு விசேட கோரிக்கையாக நாங்கள் முன்வைக்கின்றோம். தேர்தலில் வெல்லக்கூடிய எங்களோடு சேர்ந்து பயணிக்கக் கூடிய பெண்களைத் தயவு செய்து முன்மொழிவியுங்கள்.

அவர்களுக்கான இடங்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த தடவை அவ்வாறான ஒரு புதிய பரிமாணத்திலே மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கின்ற வகையிலே பல புதிய ஆற்றல் உள்ள இளைய தலைமுறைகளுக்கு வாய்ப்பளித்து  நிச்சயமாக இடம் கொடுப்போம். அதற்கான தேடலையும் நாங்கள் செய்து வண்ணம் இருக்கிறோம்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிவனேசனுக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கொடுப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக ஊடகங்களில் பல கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றனவே என ஊடகவியலாளர் கேட்டபோது,

எங்களுடைய மத்திய செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மீளவும் இன்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அதற்குப் பின்னர் தேர்தலிலே தோற்றவர்கள் இந்த தடவை சந்தர்ப்பத்தை வழங்காமல் புதியவர்களை உள்வாங்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே அந்த பிரிவுக்குள் பலர் அடங்குவார்கள். ஆனால் சிறிதரணை பொறுத்தவரை அதற்குள் வர மாட்டார்.

எனினும் இன்றைய கூட்டத்தில் நான் கூறியிருந்தேன் கட்சியினுடைய தீர்மானத்தை மீறி ஜனாதிபதி தேர்தலிலே கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து பிரசாரம் செய்த காரணத்தினால் அவருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்பதற்கு அப்பால் அவராகவே ஒதுங்கி இருந்தால் நல்லது என தெரிவித்திருந்தேன்.

எனினும் ஸ்ரீதரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போட்டியிடுவார்.

என்னையும் அவரையும் யாழ் மாவட்டத்தில் கட்டாயமாகப் போட்டியிட வேண்டும் என சகல நியமன குழு உறுப்பினர்களும் கூறி இருந்தார்கள். அதற்கு அமைவாக நாங்கள் இருவரும் யாழ் மாவட்டத்திலே போட்டியிடுவோம். வெற்றியும் அடைவோம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எங்கள் இருவருக்கும் இது நான்காவது பாராளுமன்றம் எனினும் இன்னும் ஏழு பேரை நியமிக்க வேண்டும். மிகவும் ஆர்வமாக இளையவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதற்கு நாங்கள் கருத்தாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More