கற்பிட்டி இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுமார் 160,000 வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் 22,100 மாத்திரைகள் கடற்படையினரால் வியாழக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளன.
கடற்படையினரால் கற்பிட்டி இப்பனதீவு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், குறித்த கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த படகொன்றில் இருந்து இந்த சிகரட்டுகள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காகவும் கடற்படையினர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்படையினரின் நடவடிக்கைகள் காரணமாக கடத்தல் காரர்கள் குறித்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகளை கரைக்கு கொண்டு செல்ல முடியாததால் இவ்வாறு இப்பனதீவு கடற்கரையில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகு, வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.