உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலக சுற்றுலா தின விழா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (23) மாலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் பங்கேற்புடன் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இதில் அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகளும் பங்கேற்றதோடு, குறித்த சுற்றுலா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,
இலங்கை வரலாற்றில் மிகவும் முதன்மையான ஒரு வரலாற்றைக் கொண்ட மன்னார் தீவின் உல்லாசப் பயணத்துறையை வளர்க்கும் நோக்கத்தோடு, வட மாகாண சுற்றுலா பணியகமும், மாவட்ட செயலகமும், நகர சபை போன்ற திணைக்களங்களும் இணைந்து, மன்னார் மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக உல்லாசப் பயண தினத்தை இம்முறை மன்னார் மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
உண்மையில் மன்னார் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்த அடையாளங்களில் ஒன்றான கீரி கடற்கரையை மையமாகக் கொண்டு, இந்த வருடத்துக்குரிய உல்லாசப் பயண தினங்கள் 25, 26, 27ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் கொண்டாடப்படவிருக்கிறது.
உண்மையில் இந்த சுற்றுலா தின நிகழ்வில் மன்னார் மாவட்டத்தின் கலாசார பாரம்பரிய மரபுரிமை அம்சங்களைப் பேணும் வகையில், மன்னார் மாவட்டத்துக்கே சிறப்பான பாரம்பரிய உணவு முறைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தி, அதை மக்களுக்கு பரிமாறி, மற்றும் வெளி மாவட்டங்கள், சர்வதேச ரீதியில் இருந்து வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கும் அதை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு பாரம்பரிய உணவுத் திருவிழா அமைப்பும் இந்த நிகழ்வில் ஒரு முக்கியமான இடமாக காணப்படுகிறது.
அதனை விட மன்னார் மாவட்டத்துக்கே முதன்மையான பல கலாசார அம்சங்கள் காணப்படுகின்றன. எனவே அந்த மன்னார் மாவட்டத்துக்கு உரித்தான பண்பாட்டு அம்சங்களை வெளிக்கொணரும் முகமாக நாட்டியங்கள், வில்லுப்பாட்டு, அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் நான்கு மதத்தவர்கள் மிகவும் சமாதானமான முறையில் வாழ்கின்றார்கள்.
எனவே அந்த மதத்தினரின் அடையாளங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை அம்சங்களின் வகையிலே பல்வேறுபட்ட கலாசார பண்பாட்டு விழாக்களும் அன்றைய தினத்தில் மன்னார் மாவட்டத்தில் அலங்கரிக்கப்படவிருக்கிறது.
இதை விட மன்னார் மாவட்டத்துக்கு உரித்தான பல சிறப்பான விளையாட்டு விழாக்களும் இங்கே இந்த உல்லாசப் பயணத்துறையை வளர்க்கும் நோக்கில் மக்கள் பார்வைக்காக கொண்டாடப்படவிருக்கிறது.
25ஆம் திகதி பட்டப் போட்டிகள், 26ஆம் திகதி கடற்கரைப் பந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகள், 27ஆம் திகதி மாலை 4 மணிக்கு கபடி போட்டிகள் எனப் பல்வேறுபட்ட அம்சங்கள் நடைபெறவுள்ளன.
இம்முறை கொண்டாடப்படுகின்ற இந்த உல்லாச தின நிகழ்வு மன்னார் மாவட்டத்தில் ஒரு அபிவிருத்திப் பாதையிலே முன்னோக்கி ஒரு உச்ச நிலைக்கு எடுத்துக்கொண்டு செல்லும் நிகழ்வாக, இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் உள்ள அனைத்து மக்களும், நலன்விரும்பிகளும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கெடுத்து, மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு தங்களாலான ஒத்துழைப்புகளையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பங்குபற்றுதலுடன், குறிப்பாக முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத்துறையினர், அதேபோன்று அனைத்து திணைக்களங்களின் பங்குபற்றுதலோடு — இந்த சுற்றுலா தினக் கொண்டாட்டம், மூன்று நாள் நிகழ்வாக நடைபெறவிருப்பது ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகிறது.
இந்நிகழ்வின் முதல் நாளில் வட மாகாண ஆளுநர், இரண்டாம் நாள் வட மாகாண செயலாளர், மூன்றாம் நாள் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெறவிருப்பதால், அனைத்து பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் இந்த நிகழ்வுக்காக வரவேற்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மிக உயர்ந்த முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அந்த வெள்ளோட்டமாக நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகளும் அன்றைய தினம் நடைபெறவிருக்கின்றன. அதனுடன் இணைந்த வகையில் வெகுவிரைவில் உல்லாசப் பயணிகளும் அந்த இடத்தைத் தேடி பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்படவிருக்கிறது.
எனவே, அது நல்லதொரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு முன்னேற்றகரமான செயற்பாடுகளில் அனைவரையும் பங்குபற்றுமாறு அன்பாக வரவேற்று நிற்கிறோம் என அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.