செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூரில் அகற்றப்பட்ட திலீபன் சிலையை மீள வழங்க வேண்டும் | ரோய் சமாதானம்!

நல்லூரில் அகற்றப்பட்ட திலீபன் சிலையை மீள வழங்க வேண்டும் | ரோய் சமாதானம்!

1 minutes read

நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை பலவந்தமாக அகற்றப்பட்ட சம்பவமானது இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழ் கனேடிய செயற்பாட்டாளர் ரோய் சமாதானம், நல்லூரிலிருந்து அகற்றப்பட்ட திலீபனின் சிலை மீளக்கையளிக்கப்படுவதுடன், அதனை அகற்றிய பொலிஸார் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸாரால் தியாகி திலீபனின் சிறை அகற்றப்பட்ட விவகாரம் உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்திருந்த பின்னணியில், இதுகுறித்து கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளரான ரோய் சமாதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

யாழ்ப்பாணம், நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறேன். வலுவான சந்தேகத்தைத் தோற்றுவிக்கக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழ் மக்கள் கொண்டிருக்கும் நினைவுகூரல் உரிமை மீதான நேரடித் தாக்குதலாகும்.

இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட நியாயப்படுத்தலானது வழமையான சட்ட நெறிமுறைகளை மீறும் வகையிலேயே அமைந்திருக்கிறது. தற்கால நீதித்துறையைப் பொறுத்தமட்டில் சொத்து மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளே போதிய நிலையான சான்றுகளாகக் கருதப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் ஒரு நினைவுச்சின்னத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வது வழமையான சட்டபூர்வ நடைமுறை அல்ல. மாறாக அது தொடர்புடைய சமூகங்களை அச்சமூட்டுவதற்கும், அவர்களது வரலாற்றை அழிப்பதற்குமான திட்டமிட்ட அரசியல் தூண்டுதல் நடவடிக்கையாகும். இச்சம்பவம் முறையான நீதிமன்ற மேற்பார்வையற்றதும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதுமான ஒரு செயன்முறையைப் பிரதிபலிக்கிறது.

இச்சம்பவத்துக்கான அரச அனுசரணையுடனான தூண்டுதலானது இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணானதாக அமைந்திருக்கிறது. அவ்வாக்குறுதிகளை அடுத்து வட மாகாணத் தமிழர்கள் மத்தியில் அநுரகுமார திசாநாயக்க கணிசமான வாக்குகளைப் பெற்றார். ஆனால் இப்போது பாதுகாப்புத்தரப்பினர் திலீபனின் நினைவுச்சின்னத்தை அகற்றுவதற்கு இடமளிப்பது மக்கள் கொண்டிருக்கும் அந்த நம்பிக்கையைத் தகர்க்கிறது. அதுமாத்திரமன்றி கட்டமைப்பு ரீதியான அடக்குமுறைகள் தொடர்வதையும் இது காண்பிக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் நல்லூரிலிருந்து அகற்றப்பட்ட திலீபனின் சிலை மீளக்கையளிக்கப்படுவதுடன், அதனை அகற்றிய பொலிஸார் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதேபோன்று இவ்வாறான பிளவுகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்குக் கொண்டிருக்கும் உரிமை சட்டரீதியாக உறுதிப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.