மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திமிலதீவு வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வலையிறவு பாடசாலையில் கற்பித்து வந்த ஆசிரியையான புளியந்தீவினைச் சேர்ந்த கமலநாதன் மதிவதனி (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஆசிரியை மீது லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை நிலவியது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன், தப்பி ஓடிய சாரதியைக் கைது செய்யவும், விபத்து தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.