வெறும் பேச்சுக்களினாலேயே அதிகாரத்தை பிரயோகிக்கும் ஓர் அரசாங்கம், உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதை அதனுடைய கடந்தகாலச் செயற்பாடுகள் வெளிப்படுத்தி விட்டன. இத்தகைய குறுகிய மனப்பான்மைகளைக் கைவிட்டு, புதிய நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் அரசியலை முன்னெடுங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (18) விகாரை ஒன்றில் வழிபாடுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது நடைமுறைச் சாத்தியமான, ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுப்பதை விடவும், வெறுமனே பேச்சளவிலான அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் பாரம்பரிய மற்றும் குறுகிய அரசியல் நடைமுறைகளில் இருந்து விலகி, நவீன உலகிற்கு ஏற்பவும் நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்பவும் தங்களை மாற்றிக் கொள்வதில் அவர்கள் இன்னும் போதிய வளர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் நாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைக் குறிப்பிடலாம். ஒரு நாட்டின் தேசிய மின்சாரக் கட்டமைப்பு முழுமையாக முடங்கும்போது, அதற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளோ அல்லது பொறியியலாளர்களோ தடுமாறும் நிலைமை ஏற்படுவது, நாட்டின் ஒட்டுமொத்த அரச நிர்வாகமும் எத்தகைய பலவீனமான சூழலில் இயங்குகிறது என்பதைத் தெளிவாக காட்டுகிறது. மின்சார அமைப்பு போன்ற அத்தியாவசியமான கட்டமைப்புகள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மீறி இயங்குவது போன்ற தோற்றம், அரசின் மேற்பார்வை மற்றும் அவசரகால திட்டமிடலின் போதாமையையே காட்டுகிறது.
அத்துடன், தங்களை ‘சாதாரண மக்களின் பிரதிநிதிகள்’ என அடையாளப்படுத்திக் கொண்டு அதிகாரத்திற்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள், ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பிரதான நோக்கத்தையே மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாட்டைப் பொருளாதார மீட்சிப் பாதையில் கொண்டு செல்வது, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது போன்ற முதன்மையான பணிகளில் கவனம் செலுத்துவதை விடுத்து, எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதிலும் அவர்களுக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதிலுமே தமது பெரும்பான்மையான நேரத்தையும் சக்தியையும் வீணடித்து வருகின்றனர்.
வெறுப்பு, பொறாமை மற்றும் பழிவாங்குதல் போன்ற உணர்ச்சிகரமான பிரச்சாரங்களின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டை நிலையான மற்றும் முறையான வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதற்குத் சரியான தொலைநோக்குப் பார்வையும், திறமையான நிர்வாக ஆற்றலும் அவசியமாகும்.
குறுகிய அரசியல் நோக்கங்களை கடந்து, நாட்டின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதிலும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதிலும் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.