செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் திடீர் வெள்ளப்பெருக்கு; என்ன காரணம்? – அமைச்சரவைப் பேச்சாளர்

கொழும்பில் திடீர் வெள்ளப்பெருக்கு; என்ன காரணம்? – அமைச்சரவைப் பேச்சாளர்

1 minutes read

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு போதிய வடிகால் உட்கட்டமைப்பு வசதியின்மை, சட்டவிரோத நிர்மாணங்கள், ஒழுங்கமைக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் முறையற்ற கழிவகற்றல் ஆகியவையே பிரதான காரணங்களாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (11) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உள்ள வடிகால் மற்றும் கால்வாய் அமைப்பின் மொத்த நீளம் சுமார் 469 கிலோமீற்றர் ஆகும். இருப்பினும், 2014 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புனரமைப்பு மற்றும் பராமரிப்புத் திட்டங்களின் மூலம், மணிக்கு 102 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சியைத் தாங்கும் வகையில் இந்த அமைப்பில் சுமார் 20 கிலோமீற்றர் மட்டுமே மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு உட்கட்டமைப்பு மேம்பாடுகள் வரையறுக்கப்பட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டமையால் சில பகுதிகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்ட சில இடங்களில் முன்னர் காணப்பட்ட நீண்டநேர வெள்ளப் பெருக்கு குறைவடைந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நகரத்தின் ஒட்டுமொத்த வடிகால் கொள்ளளவை அதிகரிப்பதற்கு மேலும் கணிசமான முதலீடுகளும் புனரமைப்புப் பணிகளும் அவசியமாகும்.

அத்துடன், சட்டவிரோத நிர்மாணங்கள், ஒழுங்கமைக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் முறையற்ற குப்பை அகற்றுதல் என்பன வடிகால் அமைப்பை அடைத்து நீரோட்டத்தைத் தடுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறித்துப் பார்க்கும்போது, கொழும்பு மாநகர சபை ஊடாக கால்வாயில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், அப்பகுதியில் இன்னமும் எட்டு வீடுகள் அமைந்துள்ளன. 11 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க முன்மொழிந்தபோதிலும் அக்குடியிருப்பாளர்களை மீளமர்த்தும் முயற்சி இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது.

மேலும், அண்மையில் இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 129 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. முந்தைய மழைவீழ்ச்சிப் பதிவுகள் பொதுவாக 24 மணி நேர காலப்பகுதியிலேயே அளவிடப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் 130 முதல் 150 மி.மீ வரையிலான பலத்த மழை பெய்யும்போது வடிகால் அமைப்புகள் வழியந்தோடுவதுடன், சேகரிக்கப்பட்ட குப்பைகள் நீர் ஓட்டத்தை மேலும் தடையாக்குகின்றன. வெள்ளப்பெருக்குச் சிக்கலை கடந்த இரண்டரை முதல் மூன்று வருட காலப்பகுதிக்கு மட்டுமே பொறுப்பாக்க முடியாது. மாறாக, நீண்டகால உட்கட்டமைப்பு வரம்புகள் மற்றும் நகர அபிவிருத்தி சவால்களையே இது காட்டுகிறது.

தற்போது நிலவும் இச்சூழ்நிலைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் தலையீட்டுடன் பல அரச நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்று நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதேநேரம், மக்காத கழிவுகளை வடிகால்களில் கொட்டுவதைத் தவிர்த்து, கொழும்பின் வடிகால் மற்றும் வெள்ளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.