Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.க இடையே தேர்தல் உடன்பாடு கைச்சாத்து!

அ.தி.மு.க.கூட்டணியில் பா.ம.க இடையே தேர்தல் உடன்பாடு கைச்சாத்து!

2 minutes read

அ. தி. மு. க கூட்டணியில் பா. ம. க விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை அ. தி. மு. க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.  பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ. தி. மு. க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் , அக்கட்சியின் தலைவர் கோ. க. மணி, அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அ. தி. மு. க சார்பில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் அ. தி. மு. க வின் முன்னணி நிர்வாகிகளான கே பி முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு கட்சிகளும் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு அதில் கைச்சாத்திட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது, ” 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ. தி. மு. க மற்றும் பா. ம. க இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

பேரவைத் தேர்தலில் பா. ம. க, அ. தி. மு. க கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பா. ம. க – அ. தி. மு. க இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, அ. தி. மு. க தலைமையிலான கூட்டணியில் பா. ம. க வுக்கு 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அ. தி. மு. க ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி, பா. ம. க நிறுவனர் ராமதாஸ், கோ. க. மணி, அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளோம். தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே தற்போது பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். அ. தி. மு. க தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைவது என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.’ என்றார்.

இதனிடையே தமிழகத்தில் 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அ. தி. மு. க கூட்டணியில் இடம் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு, 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ. தி. மு.க கூட்டணியில் பா. ம. க இணைந்து போட்டியிடுகிறது என்பதும், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய முதல்வரான எடப்பாடி கே. பழனிச்சாமி போட்டியிட்டு வென்ற எடப்பாடி தொகுதியில், பா. ம. க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், தி. மு. க வேட்பாளரை விட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More