இறக்குமதி செய்யப்பட்டுள்ள பால்மா அடங்கிய கப்பல் தாமதமடைவதாலும் இறக்குமதிக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்ந்து மேலும் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுதொடர்பில் நேற்று கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார பால்மா இறக்குமதி செய்வதற்காக தேவையான டொலர்கள் இல்லாததால் வங்கிகள் மூலமாக கடனுக்கான ஆவணங்கள் விநியோகிக்கப்படாத நிலை தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டில் தற்போது நிலவும் பால்மா தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.தேசிய பால்மா உற்பத்தி நிறுவனங்கள் அதனை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைககளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவிவருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். வங்கிகளில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதால் கடனுக்கான ஆவணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பால்மா மட்டுமன்றி இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
தற்போது மிக குறைந்த டொலர்களே கிடைத்து வருகின்றன. அதிலும் சில தாமதங்களே ஏற்படுகின்றன.
அதேவேளை நியூசிலாந்திலிருந்தோ அவுஸ்திரேலியாவிலிருந்தோ பால்மா கப்பல் இலங்கையை வந்தடைவதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்களெடுக்கும். தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ள பால்மா நாட்டை வந்தடைவதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.