ஐரோப்பிய நாடுகளில் பயணிகள் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக பல விமானங்கள் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டு வருவதுடன், சில விமான நிலையங்களில் பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை (05) மாத்திரம் சுமார் 30 விமானங்கள் இந்த அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல நாடுகளுக்குத் திசைதிருப்பப்பட்ட விமானங்களை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் முழுமையாகச் சோதனையிட்டுள்ளனர்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இரவு டோக்கியோவிலிருந்து சிட்னி வந்தடைந்த All Nippon Airways (ANA) விமானத்தில் பயணித்த பயணிகளை அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த விமானம் இரவு 8 மணியளவில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக பயணிகள் மேலும் 20 நிமிடங்கள் விமானத்திற்குள்ளேயே இருக்குமாறு முதலில் அறிவிக்கப்பட்டதாகவும், எனினும் அந்த காத்திருப்பு ஒன்றரை மணித்தியாலங்கள் வரை நீடித்ததாகவும் நாடு திரும்பிய பெட்ரிக் வைல்ட் என்ற பயணி தெரிவித்துள்ளார். பின்னர் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அனைவரையும் வரிசையில் நிற்குமாறும், பயணப் பொதிகளைத் தரையில் வைக்குமாறும் பெடரல் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
பயணிகளின் அனைத்துப் பொதிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாகச் சோதனையிடப்பட்டதுடன், தானியங்கி துப்பாக்கிகளை ஏந்திய ஐந்து அல்லது ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக குறித்த பயணி குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பயணிகள் வரியற்ற விற்பனை நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலும் ஒரு மணித்தியாலம் காத்திருக்க வைக்கப்பட்ட பின்னரே பொதிகளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், முன்னெடுக்கப்பட்ட இக்கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தெளிவான காரணங்கள் எதுவும் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விமான நிலையம் ஒன்றுக்கு மாலை 6 மணிக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற பாதுகாப்பு அச்சுறுத்தலைத் தொடர்ந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், சிட்னி விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துக்கும் ஐரோப்பிய நாடுகளில் விமானங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.