சிரியா அரசுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்காக அந்நாட்டுக்கு ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் விரைவில் பயணம் மேற்கொள்வார் என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரியா அரசுப் படையினர் நடத்தி வரும் தாக்குதலை 6 வாரங்களுக்கு நிறுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சிரியா நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விவரம்:
பிப்ரவரி மாத இறுதிக்குள், சிரியாவுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதர் ஸ்டெஃபான் டிமிஸ்தூரா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வார்.
அவருடன் செல்லும் தூதுக் குழு, தாக்குதல் நிறுத்தத்துக்கான சூழல் குறித்து ஆய்வு செய்யும். அதையடுத்து, ராணுவத் தாக்குதல் நிறுத்தம் எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படும்.
அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் செய்யவும் ஸ்டெஃபான் டிமிஸ்தூரா வலியுறுத்துவார்.
ராக்கெட் குண்டு வீச்சு உள்ளிட்ட கன ரக ஆயுதங்கள் அந்த 6 வார காலத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என ஐ.நா. வலியுறுத்தும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்த சிரியா அரசு தயாராகி வருவதாக, ஸ்டெஃபான் டி மிஸ்தூரா அண்மையில் கூறினார்.
எனினும், அரசின் தாக்குதல் நிறுத்தும் அறிவிப்பை கிளர்ச்சியாளர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே எனக் கூறப்படுகிறது.