இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனறு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 6 மாதம் கழித்து தாக்கல் செய்யப்போவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு தனது விசாரணையை முடிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இந்த தாமதத்திற்கு இலங்கையின் தமிழ் கட்சிகள் கண்டித்துள்ளன. இந்த முடிவைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு மாகாண கவுன்சிலர் சிவாஜிலிங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “இலங்கை மீதான விசாரணையை தாமதப்படுத்தும் வகையில் தாங்கள் பிப்ரவரி 16ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஐ.நா. அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அறிக்கையை தாமதப்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. எனவே, செப்டம்பர் மாதமாவது கண்டிப்பாக தாக்கல் செய்யப்பட்டு, தாமதமின்றி நீதித்துறை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும்” என்று சிவாஜி லிங்கம் குறிப்பிட்டுள்ளார்.