பஞ்சுமிட்டாய்களுக்கு
முதன்முதலில்
ரோஸ் நிறத்தைத் தேர்ந்தெடுத்தவன்
குழந்தைகளின்
மாபெரும் ஓவியனாகத்தான் இருப்பான்
‘பஞ்சு மிட்டாய்’ என்று
கூக்குரலிடாமல்
சிணுங்கும் சிறு மணியோசையால்
அவன் குழந்தைகளை அழைப்பது
ஒரு தெய்வீகக் குரல்
தெய்வமே அழைத்தாலும்
குழந்தைகள்
ஓடிவந்துவிடுமா என்ன
மழலைகளின் விழிகளிலும்
விரல்களிலும்
இதழ்களிலும்
கன்னங்களிலும் கூட
ஒட்டிக்கொண்ட
ரோஸ் நிறத்தின் இனிமையை
அவனைப் போல
யாரும் ரசித்திருக்க முடியாது
மேலும் குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு மென்மையைத் தருகிறவன்
கலைஞனாக இல்லாமல்
வேறு என்னவாக இருக்க முடியும்
குழந்தைகளின் கலைஞன்
தன் படைப்புகளை
அதன் அசலான வெண்ணிறத்தில்
வழங்க நினைத்தான்
அவனது குழந்தைகளே கூட
அவற்றை விரும்பவில்லை
சலிப்புற்ற கலைஞன்
கடற்கரையில் ஒருநாள்
களைத்து நின்றபோது
அவனுக்கு முன்னால்
ஒரு வானவில்
அது
கலைந்துகொண்டேயிருந்தது
பழநிபாரதி