மதங்களை இதயத்தில் தூக்கித் திரிகிறாயா ?
நீ….!
வெட்கப்படு… வேதனைப்படு…
சாதிகளை உடலில் பூசி அலைகிறாயா ?
நீ….!
அசிங்கம் கொள்… அருவருப்பு கொள்…
கடவுளைத் தேடுகிறாயா ..?
மனிதனை நேசி…
பெண்களைப் போற்று…
குழந்தைகளைக் கொண்டாடு…
நீ….!
அளவற்ற .. நிகரற்ற..
ஆற்றல் பெறுவாய்…!
பூமி செளந்தர்யமானது…
வானம் கருணைமிக்கது…
மரம் , செடி , கொடிகள்
உனக்கு
அன்பைப் பகிர்கின்றன…
நதிகள் தேவதைகள்
பூக்களை , பழங்களை , தானியங்களை
உனக்குப்
பரிசளிக்கின்றன…
விண்மீன்கள், நிலா , சூரியன் மற்றும் சுடர்கள் அனைத்தும்
உனது பரிசுத்தமான
இருதயத்தையே வாஞ்சிக்கின்றன…
ஆகாயத்துப் பறவைகள், காட்டு மிருகங்கள் , ஊரும் பிராணிகள் , சமுத்திரத்தின் மச்சங்கள் என
சகல உயிர்களும்
உனது வாழ்வைச் சார்ந்தே வாழ்கின்றன…
உன் வாழ்வு
காற்றில் கரையும் கற்பூரம்.
வசந்ததீபன்