உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஓரு வருடத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.
எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. இந்த நிலையில், உக்ரைனின் முதல் வெளியுறவு துறை துணை மந்திரியான எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக கடந்த 10ஆம் திகதி இந்தியாவுக்கு வந்தார்.
அவரை டெல்லியில் வெளிவிவகார அமைச்சகத்தின் மேற்கத்திய நாடுகளுக்கான செயலாளர் சஞ்சய் வர்மா சந்தித்து பேசினார். அவரது இந்தப் பயணத்தில், வெளியுறவு துறை இணை மந்திரி மீனாட்சி லேகியை சந்தித்து பேசினார்.
கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் இருந்து தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வரும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த போரில் ரஷ்ய வீரர்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை பற்றியும் தபரோவா குறிப்பிட்டார்.
ரஷ்ய வீரர்கள் அவர்களுடைய, மனைவி, தாயாருடன் பேசிய உரையாடல்களை நாங்கள் இடைமறித்து கேட்டோம். அதில், உக்ரைனில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பல பொருட்களை திருடினோம் என அவர்கள் கூறினர்.
அதிலும், கழிவறை கிண்ணங்களை கூட அவர்கள் திருடி உள்ளனர் என உரையாடலில் இருந்து தெரிய வந்து உள்ளது என தபரோவா கூறியுள்ளார்.
தி மாஸ்கோ டைம்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட செய்தியொன்றில், உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய வீரர்கள், போர் தொடங்கிய முதல் 3 மாத காலத்தில், திருடிய 58 மெட்ரிக் டன் பொருட்களை தங்களது வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.