சீனாவில் கொடிய விஷத்தன்மை கொண்ட கிழங்கு சேர்த்து சமைத்த உணவை சாப்பிட்ட 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
யுனான் மாகாணம் ஜின்னியு நகரைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு நேற்று பன்றி இறைச்சியுடன் கூடிய உணவை பரிமாறினார். அந்த உணவில் மாங்க்ஷூட் வேர் எனப்படும் ஒருவகை கிழங்கை சேர்த்து சமைத்துள்ளனர். இது விஷத்தன்மை வாய்ந்தது என்பதால், உணவை சாப்பிட்ட அனைவரும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர்.
இவர்களில் 6 பேர் பலியான நிலையில், 21 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த விஷ கிழங்கை சாப்பிட வேண்டாம் என கிராம மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
மாங்க்ஷூட் வேர் சில நேரங்களில் மருத்துவத்தில் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.