அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படிப்பவர் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கள்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல.
அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க பொது மக்கள் மற்றும் ஒபாமா, மார்க் ஸக்கர்பெர்க், ஹிலாரி கிளிண்டன் போன்ற பிரபலங்களின் ஆதரவும் அகமதுக்கு கிடைத்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தந்தை “ அகமது தன் பழைய பள்ளிக்கு திரும்ப செல்ல விரும்பவில்லை. அவரை மற்ற பள்ளிகளில் சேர்ப்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம். அமெரிக்கா தவிர வெளிநாடுகளில் சேர்ப்பது அல்லது வீட்டிலேயே இருந்துக்கொண்டு படிப்பது பற்றியும் யோசித்துவருகிறோம்” என தெரிவித்துள்ளார்.