தென்கிழக்கு பிரான்ஸில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அங்கு இதுவரை சுமார் 400 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 75 வயது முதியவரின் சடலம், சான்-மித்ர்-லெ-ரம்பார் நகராட்சிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஹோட்-கோர்ஸ் பகுதியிலுள்ள கிசோனாச்சியா என்ற இடத்தில் மற்றொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரில் இருவர் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், ஆற்று வெள்ளப்பெருக்கில் கார் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தில் இருந்த ஒருவர் ஜன்னல் வழியாக பாய்ந்து உயிர் தப்பியுள்ள நிலையில், மற்றையவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். காணாமல் போனவரைத் தேடும் பணிகளில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மார்சேய் நகருக்கு மேற்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இஸ்த்ரே பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக பல வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.