உக்ரைன் அரசு ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்ததை அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக ரஷ்யாவில் உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஏரோபிளாட் மற்றும் டிரான்ஸ்ஏரோ ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் உக்ரைனில் பறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்தது. ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச்செல்வதற்கு கூட தடை விதித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் விமானங்கள் மீது தகுந்த கட்டுப்பாட்டுகள் விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கும்படி போக்குவரத்து அமைச்சகத்திற்கு பிரதமர் டிமிட்ரி மெத்வேதெவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஏரோபிளாட் நிறுவனமும் இதனை உறுதி செய்துள்ளது. அக்டோபர் 25-ந்தேதி முதல் உக்ரைன் விமானங்களுக்கு தடை விதிக்கும்படி அதிகாரிகளிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ரஷ்ய செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.