சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கடந்த 60 ஆண்டுகளாகக் கோரப்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளை, அந்நாட்டு அரசு, வரும் டிசம்பர் மாதம் வெளியிடவுள்ளது.
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போரின் விவரங்களை பல ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்த அந்நாட்டு அரசு, கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்படாமல் உள்ள கணக்குகளை வெளியிட வேண்டும் என்ற “வங்கிச் சட்டம்’ சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
இதையடுத்து, கடந்த 1965-ஆம் ஆண்டிலிருந்து கோரப்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளை வெளியிட சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் இடம்பெற்றுள்ளதாக சில வங்கிகளின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுவிஸ் வங்கிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
கோரப்படாத வங்கிக் கணக்குகள் வைத்துள்ள வாடிக்கையாளரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கடைசியாக அவர் அளித்த முகவரி ஆகியவை மட்டும் வெளியிடப்படும். போதிய தகவல்கள் இல்லையெனில், ஒரு சில கணக்குகளில், கணக்கு எண் மட்டும் வெளியிடப்படும்.
எனினும், வாடிக்கையாளர் இருப்பு வைத்துள்ள தொகை குறித்த விவரம் வெளியிடப்படமாட்டாது.
உரிமை கோர வாய்ப்பு: இதன் மூலமாக, அந்தக் கணக்குகளை சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியாக உரிமை கோருவதற்கும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் யாரும் உரிமை கோரவில்லையெனில், அந்தத் தொகை அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும் என்றார் அவர்.
1