துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் பறந்தது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு என ரஷ்யா கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நேட்டோ தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அன்று சிரியாவுடனான எல்லை அருகில் துருக்கியின் வான் பரப்பில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக துருக்கி தெரிவித்துள்ளது. இனிமேல் இப்படியான அத்துமீறல்கள் நடந்தால் அதற்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டிவரும் எனவும் துருக்கி எச்சரித்திருந்தது.
இச்சம்பவம் பற்றி ரஷ்யா அளித்துள்ள விளக்கத்தில் ’துருக்கி வான்பரப்பில் ரஷ்ய போர்விமானங்கள் பறந்தது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு, இதற்கு அங்கு நிலவிய மோசமான வானிலை தான் காரணம் என கூறியுள்ளது. ஆனால் இந்த விளக்கத்தை துருக்கியும் நேட்டோவும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளன. மேலும் சிரியாவிற்கு விமானப் படையை தவிர தரைப்படை வீரர்களையும் ரஷ்யா அனுப்பிவருவதற்கும் நேட்டோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் நேட்டோ நாடுகளின் போர் விமானங்களுடன் மோதல் ஏற்படாமல் தவிர்பது பற்றி அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் என ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா இதுவரை எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.