அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததையடுத்து, துணை விமானி அந்த விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.
“அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், ஃபீனிக்ஸ் நகரிலிருந்து பாஸ்டன் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
இதுகுறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியா ஹுகியூலே கூறியதாவது:
ஃபீனிக்ஸிலிருந்து பாஸ்டன் நகருக்கு எங்களது விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டது.
நடு வானில் அந்த விமானத்தின் விமானி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அதையடுத்து, விமானத்திலிருந்த துணை விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார்.
அதனைத் தொடர்ந்து, அருகிலிருந்த சிரக்யூஸ் நகர விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவே, அங்கு விமானம் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சிரக்யூஸ் விமான நிலையத்துக்கு புதிய பணியாளர் குழு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பாஸ்டன் நகரைச் சென்றடைந்தது என்றார் அவர்.
இந்தச் சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கூறுகையில், பொதுவாக துணை விமானியும் தலைமை விமானிக்கு இணையான பயற்சி பெற்றிருப்பதால் இருவரில் ஒருவர் நடுவானில் உயிரிழந்தால் அது விமானத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்று தெரிவித்தனர்.
4