சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிரியா மற்றும் ஈராக்கில் தனி நாட்டை உருவாக்கும் நோக்கில் கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுப்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
முன்னதாக, தினமும் 10 ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா கூறியிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்யா. கடந்த 24 மணிநேரத்தில் ஐ.எஸ்.-யின் 60 நிலைகளை தாக்கி அழித்ததாகவும், இதில் குறைந்தது 300 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் எனவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கூட்டுப் படைகளுடன் சேராமல் ரஷ்யா தனியாக தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.