அரபு வசந்தம் என்ற பெயரில் துனிசியாவில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து அங்கு பன்முக மக்களாட்சியைக் கட்டியெழுப்ப பெரும் பங்களிப்பாற்றிய துனிசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisia’s “National Dialogue Quartet”) என்ற அமைப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் எழுதி வைத்த உயிலின்படி, நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவர்களுக்கும், இராணுவ தாக்குதல்களை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவர்களுக்கும், அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக திகழ்ந்தவர் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகளும் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்போது அமைதிக்கான பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது.
உலகளாவிய அளவில் மேற்கண்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களின் பெயர்கள் ஆண்டுதோறும் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் நோபல் பரிசு பெற்றவர்கள், சில பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பல நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சில குறிப்பிட்ட உலகளவிலான அமைப்புகள் உள்ளடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இந்த நோபல் பரிசுக்கான பரிந்துரையைச் செய்யலாம்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் விழாவில் நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவரை தேர்வு செய்து, இப்பரிசினை வழங்குகின்றது.
நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம், ஒரு பதக்கம் மற்றும் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இவ்வாண்டின் (2015) அமைதிக்கான நோபல் பரிசு துனிசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு (Tunisia’s “National Dialogue Quartet”) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.