இலங்கையில், பல்வேறு சிறைகளில் எந்தவித விசாரணையுமின்றி அடைக்கப்பட்டிருக்கும் 200 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான வடக்கு மாகாணத்தின் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.
இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தாங்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யக் கோரி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனவுக்கு விக்னேஷ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: எந்தவித விசாரணையுமின்றி கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் சிறையில் வாடுவது துரதிருஷ்டவசமானது. இவர்களின் பிரச்னைகளை உணர்வுப்பூர்வமாகவும், கருணையோடும் அணுக வேண்டும்.
சிறையில் வாடும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை நாம் எடுத்தால், அவர்களுக்குத் திருப்தி ஏற்படும்.
அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக சிறையில் வாடும் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை வகைப்படுத்தி ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும்.
அவ்வாறு தயாரிக்கும் பட்டியலை வைத்துக்கொண்டு சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க முடியும். அல்லது அவர்களை பிணையிலாவது விடுவிக்க முடியும்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டாலும், இதுவரை அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
எனவே அவர்களை பிணையில் விடுவிக்க முடியும் என்று அந்தக் கடிதத்தில் விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, “எங்களை விடுவிப்பதற்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தமாட்டோம்’ என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றபோது, ஏராளமான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
0