தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வித்தியாசமான நடிகர் என பெயரெடுத்த விக்ரம் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
‘என் காதல் கண்மணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் 1990ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியானது. தொடர்ந்து தமிழில் சில படங்களில் நாயகனாக நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். இருந்தாலும் விக்ரம் முன்னணி நாயகனாக வர முடியாமல் இருந்தார். அந்த சமயங்களில் அப்பாஸ், பிரபுதேவா உள்ளிட்ட பல நடிகர்ளுக்கு பின்னணி குரல் கொடுத்தும் திரையுலகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
1999ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’ திரைப்படம் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து, தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன், கந்தசாமி, ராவணன், தெய்வத் திருமகள், ஐ என பல வித்தியாசமான படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். இப்படங்களில் விக்ரமின் நடிப்பு அனைவரும் பாராட்டும் விதமாக அமைந்தது.
பிதாமகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். இதுவரை 6 பிலிம்பேர் விருது மற்றும் தமிழ்நாடு விருது என பல விருதுகள் வாங்கியிருக்கிறார். நடிப்புக்காக எதையும் செய்யத் தயங்காதவர் எனப் பெயரெடுத்த விக்ரமைப் போல ஒரு நடிகரை திரையுலகத்தில் பார்ப்பது அரிது என அவரை வைத்து இயக்கிய இயக்குனர்கள் மனதாரப் பாராட்டி இருக்கிறார்கள்.
இன்னும் சில நாட்களில் விக்ரம் நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள திரைப்படம் வெளிவர உள்ளது.