சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. 4 ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவில் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா களத்தில் இறங்கி கடும் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது.
இந்நிலையில் சிரியாவில் ரஷ்யா மேற்கொண்டுவரும் வான்வழி தாக்குதலில் இதுவரை சுமார் 450 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்றில் ஒருவர் பொதுமக்கள் என்று சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சுமார் 151 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் 35 பெண்களும் 38 குழந்தைகளும் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.