ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவு விடுதியில் நேற்று நள்ளிரவு வாணவேடிக்கையுடன் ராக் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக விடுதியின் கூரையில் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கூரை மற்றும் ஒரு பில்லர் மளமளவென பற்றி எரிந்ததால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கிளப்பை விட்டு வெளியேறினர்.
வெளியேறுவதற்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, பலர் தீயில் சிக்கிக்கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஓடியதிலும் பலர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 155 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு புக்கரெஸ்ட்டில் உள்ள 10 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.