மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகியின் கட்சி பெரும்பான்மை பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அந்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 16 இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 15 இடங்களை ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசி முன்னணி கைப்பற்றியது.
நாடு முழுவதிலுமான முடிவுகள் தெரிய இரண்டு நாள்களாகும் என்று கூறப்படுகிறது. முழுமையான முடிவுகள் தெரிய 10 நாள்களாகும்.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில், ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி 70 சதவீத இடங்களப் பெற்று, நாடாளுமன்றத்தில் அருதிப் பெரும்பான்மை பலம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியான்மர் ராணுவத்தின் ஆதரவுடன் ஆட்சி புரிந்து வந்த யூனியன் சாலிடாரிட்டி கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
மியான்மர் நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் அந்நாட்டு ராணுவத்தின் நியமன உறுப்பினர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
மியான்மரில் தற்போதுள்ள சட்டப்படி, வெளிநாட்டினரை மணந்தவர்கள் அந்நாட்டின் அதிபர் பதவி வகிக்கத் தகுதியற்றவர்கள்.
இந்தக் காரணத்தால் ஆங் சான் சூகி கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றாலும் கூட, அவரால் அதிபர் பதவி வகிக்க முடியாது.
0