சிரியா, ஈராக் நாடுகளை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது, சிரிய ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் பெரும்பாலான ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்க இரு நாட்டு ராணுவமும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், ஈராக்கை ஒட்டி சிரியாவின் கிழக்கு எல்லையோரம் அமைந்த நகரான டெய்ர் எஸ்ஷோர் நகர விமானதளத்தை நோக்கி கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் வேகமாக முன்னேறி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது, இந்நிலையில் நேற்று முன்தினம் 100–க்கும் அதிகமான தீவிரவாதிகள் டெய்ர் எஸ்ஷோர் விமானதளத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். அவர்கள், நவீன ரக ஆயுதங்களுடன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்த இராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தவே, அவர்களும் பதிலடி கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து கடும் சண்டைக்கு பின், விமானதளத்தை தீவிரவாதிகள் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியை ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இந்த சம்பவம் உட்பட டெய்ர் எஸ்ஷோர் நகரின் பிற பகுதிகளில் நடந்த சண்டையில் மொத்தம் 100 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுமார் 70 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.