அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த பாகிஸ்தான் உண்மையான முயற்சிகளை எடுக்கவில்லை. அதே நேரத்தில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில் தீவிரமாக உள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் சார்பில் விசாரணைக் கூட்டம் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ரிச்சர்ட் ஓல்ஸன் கூறியதாவது:
பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கவலையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அணு ஆயுதத் தயாரிப்பு, ஏவுகணைத் திட்டங்களில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அமெரிக்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அங்குள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை குறித்து அணு ஆயுத வல்லமை பெற்ற அனைத்து நாடுகளுமே தங்கள் கவலையைப் பகிர்ந்து கொண்டுள்ளதுடன், அணு ஆயுத விவகாரத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமென்று பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா பேச்சு நடத்தவில்லை. இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உண்மையான அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு சரியானதுதான். இந்தியாவால் தங்களுக்கு ஆபத்து உள்ளது என்று கூறிக்கொண்டு ஆயுதப் போட்டியில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது என்றார் ரிச்சர்ட் ஓல்ஸன்.
இப்போதுள்ள வேகத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் அந்நாட்டிடம் 350 அணு ஆயுதங்கள் இருக்கும்; மேலும் அணு ஆயுதத் தயாரிப்பில் இந்தியா, பிரான்ஸ், சீனா, பிரிட்டனை பாகிஸ்தான் முந்திவிடும் என்று கார்னஜி சர்வதேச அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.
4