இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.), அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு கிடைத்து வரும் அனைத்து வகையான நிதி ஆதாரங்களையும் முடக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க நிதி அமைச்சர் ஜாக் லியூ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இது போன்ற தீர்மானக் கூட்டத்தில் முதல் முறையாக உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இதில் பயங்கரவாதக் குழுக்களுக்குக் கிடைத்து வரும் நிதி ஆதாரத்தை முடக்குவதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது. அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க நிதி அமைச்சர் ஜாக் லியூ கூறியதாவது:
பிற பயங்கரவாதக் குழுக்களுடன் ஒப்பிடுகையில், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு வெளியிலிருந்து கிடைக்கும் நிதி உதவி மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. புதிய பகுதிகளை ஆக்கிரமித்தல், கொள்ளையடித்தல் மூலமாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிதி திரட்டி வந்த நிலை மாறிவிட்டது.
அதற்கு பதிலாக, கச்சா எண்ணெயைக் கருஞ்சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுகின்றனர். அந்த வகையில், ஐ.எஸ். பயங்கரவாத இதுவரையில், ரூ. 3,250 கோடி (50 கோடி டாலர்) வரை திரட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை மீட்பதன் மூலமாகவே அவர்களின் நிதி ஆதாரத்தை முழுமையாக கட்டுப்படுத்த இயலும். இது சாத்தியமாவதற்கு இங்கு தீர்மானத்தில் வாக்களித்த நாடுகளும், பிற கூட்டணி நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
1