இலங்கை கடற்படையினரால் கடந்த நவம்பர் மாதமும் இம்மாதம் பத்தாம் தேதியும் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 16 பேரின் சிறைக்காவலை நீட்டித்து இலங்கையில் உள்ள இரு நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆறு மீனவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் சிறைக்காவலை வரும் 30-ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி அலெக்ஸ் கிரேஸ் உத்தரவிட்டார்.
இதேபோல், கடந்த பத்தாம் தேதி கைது செய்யப்பட்ட காரைக்காலை சேர்ந்த பத்து மீனவர்கள் பருத்தித்துறையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் சிறைக்காவலை வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டார்.