ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு பண உதவி செய்த இரு மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் படையில் ரஷியாவை சேர்ந்த சுமார் மூவாயிரம் பேர் தற்போது அங்கு ஆயுதம் போராடி வருவதாகவும், இதில் சிலர் அங்கு போராடிவிட்டு தாய்நாட்டுக்கு திரும்பி வந்துவிட்டதாகவும் ரஷிய உளவுத்துறை கருதுகின்றது.
இந்நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல்களை ஆதரிக்கும் வகையில் அவர்களுக்கு நிதியுதவி செய்ததாக கடந்த ஆண்டு இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
எலேனா அர்ஷக்கானோவா மற்றும் சைடா கலிகோவா ஆகிய அந்த இரு இளம்பெண்களும் மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தனர். வீட்டில் தயாரிக்கப்பட்ட சோப் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்துவந்த அவர்கள் இருவரும் அதன்மூலம் கிடைத்த லாபத்தை வங்கி கணக்கின் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்தது உளவுத்துறையினருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, எலேனா அர்ஷக்கானோவாக்கு ஐந்தாண்டு மூன்று மாதங்கள் மற்றும் சைடா கலிகோவாவுக்கு ஐந்தாண்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.