ஜி.வி.பிரகாஷ் தற்போது விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது ஜி.வி.பிரகாஷின் 50வது படமாகும். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் 7 பாடல்கள் இடம் பெறுகின்றன. இந்த பாடல்கள் குறித்த சுவாரஸ்யமான செய்திகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே இப்படத்தின் அறிமுக பாடலான ‘ஜித்துஜில்லாடி’ என்னும் பாடல் வரிகளை வெளியிட்டார். பின்னர் விஜய் பாடிய ‘செல்லா குட்டி…’ என்ற பாடலை இன்று வெளியிட்டார். இந்த பாடல் வரிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், உத்ரா உன்னி கிருஷ்ணனுடன் ஜி.வி.பிரகாஷ் டூயட் பாடிய ‘ஈனாமீனாடீகா…’ என்ற பாடல் வரிகளை வெளியிட்டிருக்கிறார்.
‘ஈனாமீனாடீகா…’ என்ற பாடல் இந்தியில் மிகவும் பிரபலமான பாடல். அனேகமாக இப்பாடலின் ரீமேக்காக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘தெறி’ படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பாடகளை மார்ச் 20ம் தேதி வெளியிட இருக்கின்றனர். ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரவிருக்கிறது.