பிரேசில் அதிபர் டில்மா ரூஸஃபை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையின் முதல் கட்டமாக அந்நாட்டின் நாடாளுமன்றம் பரிசீலனைக் குழுவொன்றை அமைத்துள்ளது.
பிரேசிலில் பொருளாதாரத் தேக்க நிலை அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரிக் கொள்கையுடைய அதிபர் டில்மா ரூஸஃபுக்கு எதிராக நாடெங்கும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பாகப் பரிசீலிக்க 65 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அந்நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை அமைத்தது.
நாட்டின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது என்கிற தோற்றத்தை அளிக்கும் விதமாக வருவாயை உயர்த்திக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் உள்ளது.
கடந்த 2014-இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக இந்த முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிப்பது தவிர, அவரைப் பதவி நீக்கம் செய்வதைப் பரிசீலிக்க நாடாளுமன்றக் குழுவை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.
513 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவையில் அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து அந்தக் குழு தனது பரிந்துரையை அளிக்கும்.
அந்தக் குழு தெரிவிக்கும் முடிவு மேலவையின் பரிசீலனைக்கு உள்பட்டது. மேலவையின் முடிவே இறுதியானது.
பொருளாதாரத் தேக்க நிலை, அரசு எண்ணெய் நிறுவனத்தில் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரேசில் முழுவதும் பல்வேறு நகரங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், தனது அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அமைச்சர்களுடன் அதிபர் டில்மா ரூஸஃப் அவசர ஆலோசனை நடத்தினார். கடந்த ஆண்டு அவரைப் பதவி நீக்கம் செய்ய மேற்கொண்ட முயற்சி சட்டச் சிக்கல் காரணமாகத் தோல்வியுற்றது.
பொருளாதாரத் தேக்க நிலையால், நாட்டில் கொந்தளிப்பான நிலை இருப்பதால், பதவி நீக்க கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
அதிபரின் பதவி நீக்கம் தொடர்பான விதிமுறைகள் குறித்து பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அது தொடர்பான விசாரணை அடுத்த சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.