யுகோஸ்லேவியா நாட்டின் பிரிவினையின்போது நடைபெற்ற உள்நாட்டுக் கலவரங்களில் முஸ்லிம்களை கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட போஸ்னியா செர்ப் இன மக்களின் முன்னாள் அரசியல் தலைவர் ரடோவன் கராதிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டில் யுகோஸ்லேவியா நாடு பல துண்டுகளாக உடையத் தொடங்கியது. இதில் போஸ்னியாவும் ஒன்று. அப்போது, போஸ்னியா பகுதியில் உள்ள செர்பிய இனமக்களின் அரசியல் தலைவராகவும், போராளிக் குழுக்களின் தளபதியாகவும் ரடோவன் கராதிக் செயல்பட்டார்.
போஸ்னியா பகுதி செர்பியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என இவர் விரும்பினார். இதையொட்டி 1995-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரங்களில் ரடோவன் கராதிக் தலைமையிலான படையினர் சுமார் 8,000 முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.
இதுதொடர்பாக கராதிக் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு ஐ.நா. விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் கராதிக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐ.நா. விசாரணை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.