ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தைக் குறி வைத்து திங்கள்கிழமை 4 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஏவுகணைகளில் ஒன்று, இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் விழுந்தது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து எம்.பி.க்களிடம் விவரிக்க ராணுவ உயரதிகாரிகள் திங்கள்கிழமை நாடாளுமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி நான்கு ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
அதில் ஒன்று புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மீதும், மற்றொன்று நாடாளுமன்றத்தையொட்டிய ராணுவ தளத்திலும் விழுந்தன. மற்ற இரு ஏவுகணைகளும் சுற்றியுள்ள வெற்றுவெளியில் விழுந்தன. எனினும் இந்தத் தாக்குதலால் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
தாக்குதலின்போது நாடாளுமன்றத்துக்குள் இருந்த உறுப்பினர்களும், பிறரும் பத்திரமாக இருப்பதாக எம்.பி. ஒருவர் தெரிவித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 கோடி டாலர் (சுமார் ரூ.600 கோடி) செலவில் இந்தியாவால் கட்டித் தரப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறந்து வைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.