அமெரிக்காவில் இந்த வாரம் நடைபெறவிருக்கும் அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டின் இடையே, அந்த மாநாட்டுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்களுடன் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் திங்கள்கிழமை கூறியதாவது:
அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டுக்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஏராளமானோர் அமெரிக்கா வருகை தரவுள்ளனர்.
அவர்களுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்தும், அவர்களை அடியோடு ஒழிப்பதற்காக கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார் என்றார் அவர்.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மார்ச் 31, ஏப்ரல் 1) நடைபெறவிருக்கும் அணுசக்திப் பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 40 நாடுகள் பங்கேற்கின்றன.