ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.
இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டது. இருந்தபோதும், பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி மேலும் பதற்றத்தை உருவாக்கியது வடகொரியா.
இதையடுத்து வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம்விட்டு கண்டம்தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை கடந்த மாதம் பரிசோதித்தது.
இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 12.35 மணியளவில் கண்டம்விட்டு கண்டம் தாவும் அதிநவீன சக்திவாய்ந்த ஏவுகணையை வடகொரியா பரிசோதித்ததாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சான்டாக் நகரில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பாய்ந்து சென்றது? திட்டமிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி, அழித்ததா?, இல்லையா? என்பது தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
1300 கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்துச் சென்று தாக்கக்கூடிய வல்லமையுள்ள ‘ரோடாங்’ ஏவுகணைகளால் அண்டைநாடான ஜப்பானை நொடிப்பொழுதில் தாக்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.