பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியதாவது:
வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் இந்த வெள்ளப் பெருக்கால் பலத்த சேதமடைந்துள்ளன.
ஷங்லா மாவாட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். ஸ்லாட் பகுதியில் 8 பேர் பலியாகினர். கோஹிஸ்தானில் 12 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 5 குழந்தைகள் உள்பட 8 பேரும் வெள்ளப் பெருக்குக்கு பலியாகினர்.
கில்கிட் பல்திஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் புதையுண்டு போயின.
மேலும், வெள்ளப் பெருக்கால் பாலங்கள், பயிர்கள் முற்றிலும் நாசமாயின.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கும், உடமைகளை இழந்தவர்களுக்கும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
2